
|
http://www.esnips.com/doc/ffd3a0f1-399d-4058-b921-5097251e5a2c/SARASWATHI-SONG-KURAL-RAHINI
சரஸ்வதி அந்தாதி
காப்பு
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்குவாரா திடர்.
படிக நிறமும் பவளச் செவ்வாயும்
குடிகமழ்பூந் தாமரைபோற் கையும் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தாற்
கல்லும் சொல்லாதோ கவி.
சகலகலாவல்லி மாலை - குமரகுருபரர் அருளியது
வெண்டா மரைக்கன்றி நின்பதம் தாங்க என் வெள்ளையுள்ளத்
தண்டா மரைகுத் தகாது கொலோ சகமேழுமளித்து
உண்டானுறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலா வல்லியே.
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பாற்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலா வல்லியே.
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுதார்ந் துன்அருட் கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங் கொலோ உள்ங் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே சகலகலா வல்லியே.
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித் தருள்வாய் வடநூற் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே சகலகலா வல்லியே.
பஞ்சப் பிதந்தரு செய்யபொற்பாத பங்கேருகமென்
நெஞ்சத் தடத்து அலராத தென்னே நெடுந்தாட் கமலக்
கஞ்சத் துவச முயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளை
தவிசொத் திருந்தாய் சகலகலா வல்லியே.
பண்ணும் பரதமுங் கல்வியும் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுது எளிதெய்த நல்காய் எழுதாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலு அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலா வல்லியே.
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக் கண் நல்காய் உளங்கொண்டு தொண்டர்
தீட்டுங் கலைத் தமிழ் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ளோதிமப் பேடே சகலகலா வல்லியே.
சொல்விற் பனமும் அவதானமும் கல்வி சொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளினாசனஞ்சேர்
செல்விக்கரி தென்றுஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும்செல்வப் பேறே சகலகலா வல்லியே.
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலந்தோய் புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத்தாளே சகலகலா வல்லியே.
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண்ட ளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வ முள்தோ சகலகலா வல்லியே.
http://www.esnips.com/doc/ef8e6108-a76e-493f-9a71-e98c0ca08076/saraswathi---vendamarai--kural-rahini